சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும், ஸ்ரீ விஜயபுரம் உட்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளிலும் நேற்று (16-05-2026) துவங்கியது.
தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் 26-05-2026 வாக்கில் துவங்கக்கூடும். 15-05-26 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று 16-05-2026 காலை 08.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.