புதுடில்லி: இந்தியா பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். எவ்வளவு தான் பெண்கள் ஃபேஷனானவர்களாக இருந்தாலும், புடவைகளை அணிந்தால், அவர்கள் மங்களகரமாக காணப்படுவார்கள். அதுமட்டுமின்றி ஜீன்ஸ், டி-சர்ட் என்று எந்த ஒரு ஃபேஷனான ஆடைகளும், புடவைகளின் முன்பு தோற்றுவிடும். ஏனெனில் அந்த வகையில் புடவைகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன.
மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான புடவைகள் பிரபலமாக மக்கள் மத்தியில் உள்ளன. உதாரணமாக, பெங்காலியில் ஜாம்தானி வேலைபாடுகளுடன் கூடிய புடவைகள் பிரபலமானது. அதுவே அவுரங்காபாத்தில், பைத்தானி புடவையில் உள்ள தங்க நூல் வேலை மிகவும் பிரபலமானது. இவ்வாறு இந்தியாவில் பல வகையான புடவைகள் உள்ளன. அதுவும் எண்ண முடியாத அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகளை பார்ப்போம்!
காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பட்டு புடவை மிகவும் பிரபலமானது. அதிலும் இந்த காஞ்சிபுரத்தில் திருமண முகூர்த்தப் பட்டுக்கள் எண்ணற்ற டிசைகளில், அழகான பார்டருடன், வித்தியாசமான நிறங்களில் இருக்கும்.
டாக்காய்: இந்தியாவின் வங்காளத்தில் இருக்கும் டாக்காவில் தயாரிக்கப்பட்டது தான் டாக்காய் காட்டன் புடவைகள். ஆனால் தற்போது ஜாம்தானி வேலை உள்ள சுத்தமான காட்டன் புடவைகள் கூட மிகவும் பிரபலமாக உள்ளது.
பைத்தானி: மஹாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது பைத்தானி புடவைகள். இந்த புடவைகளின் சிறப்பு என்னவென்றால், இதில் உண்மையான தங்க நூல் கொண்டு வேலைபாடுகள் செய்யப்பட்டிருப்பது தான்.
சாம்பல்புரி: சாம்பல்புரி ஸ்டைலில் சில்க் மற்றும் காட்டன் என இருவகையான புடவைகளும் உள்ளன. மேலும் இந்த புடவையில் உள்ள சிறுசிறு எம்பிராய்டரியும், ஒரிசாவில் உள்ள சாம்பல்பூரில் இருந்து வந்தது.
கேரள புடவை: கேரளா புடவையின் சிறப்பு என்னவெனில், இதில் சந்தன நிற பட்டுப் புடவையில், தங்க நிற பார்டர் மட்டும் இருப்பது தான்.
அஸ்ஸாம் புடவை: இந்தியாவிலேயே அஸ்ஸாமில் தான் சுத்தமான சில்க் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தங்க நிற மோகா சில்க் மற்றும் அதன் தனித்துவமான நூல் வேலை தான் மிகவும் பிரபலமானது.
பனாரஸ் புடவை: பனாரஸ் புடவை, அதன் நிறம் மற்றும் அதிகமான தங்க நிற எம்பிராய்டரியால் மிகவும் பிரபலமானது. மேலும் இது வட இந்திய திருமண பட்டு புடவைகளில் மிகவும் பிரபலமானது.
பொச்சம்பள்ளி: காட்டன் புடவைகள் என்று வரும்போது, பொச்சம்பள்ளி புடவைகளும் அடங்கும். இந்த புடவைகளின் நிறங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.