சென்னை : மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தையடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துவதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.