தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில், 166 வேன், பேருந்துகளில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் 538 பள்ளி வாகனங்களும், பட்டுக்கோட்டையில் 365 பள்ளி வாகனங்களும், கும்பகோணத்தில் 260 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 1,163 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் பள்ளி வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிசீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பள்ளிகளின் 166 வேன், பேருந்துகளில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆய்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
குறைபாடுகள் உள்ள வாகனங்களில் குறைகளை சரி செய்து மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற்ற பின்னர் பொது சாலையில் இயக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறந்த பின்னர் பொது சாலையில் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெறும் என்றார் அவர்.
அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் இருசம்மாள், தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப. நித்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், முதன்மைக் கல்வி அலுவலர் வெ. பேபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.