தஞ்சாவூர்: மேயர் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி… அவ்வளவுதான் அதிமுக கவுன்சிலர்களுக்கு ஷாக்கோ ஷாக். அப்புறம் என்ன கூச்சல், சலசலப்பால் அரைமணி நேரத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் முடிவுக்கு வந்தது.
எடப்பாடி பழனிசாமி அறித்த குலவிளக்கு திட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்து காரணமாக தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல், சலசலப்பால் கூட்டம் அரைமணி நேரத்தில் கூட்டம் முடிந்தது. இதில் மேயர் சண்.ராமநாதன் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி அதுதான் செம ஹைலைட்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியவுடன் தி.மு.க. கவுன்சிலர் நீலகண்டன் பேசும்போது, ஆணையர் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்றார்.
இதையடுத்து ஆணையரின் பிரதிநிதியாக பொறுப்பேற்று மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் பங்கேற்றார்.
தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர் கண்ணுக்கினியாள் பேசும்போது, பூக்காரத்தெரு ரெயில்வே கீழ் பாலத்தில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
அதற்கு பதில் அளித்த மேயர் சண்.ராமநாதன். முதலில் நீங்கள் ஆட்சிக்கு வருவீர்களா? அப்படி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக இந்த நன்றி தெரிவிப்பது எதற்காக? இதைவிட இன்னும் கூடுதல் சிறப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். அது அனைத்து மகளிருக்கும் மிகவும் உயர்ந்த திட்டங்களாக இருக்கும் என்று அதிரடியாக சொன்னார் பாருங்க. அவ்வளவுதான் அதிமுக கவுன்சிலர்களுக்கு ஷாக்கோ… ஷாக். இதற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன், அடுத்து அ.தி.மு.க. ஆட்சிதான் என கூறினர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி அறிவித்த குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கிடைக்கும் என்றார்.
இதற்குப் பதில் அளித்து அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷங்கள் எழுப்பினர். தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் கூச்சல், சலசலப்பு நிலவியது. இதன் காரணமாக 10 தீர்மானங்கள் தவிர மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன எனக் கூறிய மேயர் சண்.ராமநாதன் இத்துடன் கூட்டம் முடிவடைந்துவிட்டது என அறிவித்து சென்றார். இதனால், இந்த கூட்டம் தொடங்கிய சுமார் அரை மணிநேரத்தில் முடிவடைந்தது.
பொதுப்பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க… தேர்தல் வாக்குறுதிக்கு மாமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது என்பது சரியில்லை. அதற்கு மேயர் சண்.ராமநாதன் அதிரடியாக ஒரே கேள்வி கேட்டு அதிமுக கவுன்சிலர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார் என்று திமுக கவுன்சிலர்கள் பாராட்டினர். இந்த விஷயம் மக்கள் மத்தியில் பரவியது.