கவுகாத்தி: சரக்கு ரயில்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மற்றும் ஐஐடி கவுகாத்தி இணைந்து உருவாக்கியுள்ள இந்த புதிய அமைப்புக்கு ‘புராஜெக்ட் திருஷ்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில் பெட்டிகளின் கதவுகள், பூட்டுகள் மற்றும் சீல்களின் நிலையை வேகமாக கண்காணிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ரயில் குறிப்பிட்ட கண்காணிப்பு புள்ளியை கடந்து செல்லும்போது அதிவேக கேமராக்கள் மூலம் ஒவ்வொரு சரக்கு பெட்டியின் படங்களும் பதிவு செய்யப்படும். பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்தப் படங்களை ஆய்வு செய்து பெட்டி எண், கதவு, பூட்டு மற்றும் சீல் ஆகியவற்றின் நிலையை கண்காணிக்கும்.
சீல் உடைந்திருந்தாலோ, பூட்டில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ அல்லது சரக்கு பெட்டியில் சந்தேகத்திற்கிடமான மாற்றம் தென்பட்டாலோ அதனை விரைவாக கண்டறிய இந்த அமைப்பு உதவும்.
இதன் மூலம் இரவு நேரம், மழை அல்லது குறைந்த வெளிச்சம் போன்ற சூழல்களிலும் சரக்கு பெட்டிகளை ஆய்வு செய்யும் பணியை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ள முடியும்.
சரக்கு திருட்டு மற்றும் முறைகேடுகளை விரைவாக கண்டறிவதுடன், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வணிகப் பிரிவு ஊழியர்களின் பணிச்சுமையையும் குறைக்க இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
