சென்னை: இயற்கை ஆர்வலர்களுக்கு சிறப்பான ஒரு சுற்றுலாத்தலம் என்றால் அது ஆனைமலை என்றால் மிகையில்லை.
புல் மலைகள், காடுகள், மலைகள், நீர்த்தேக்கங்கள், கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்ட ஆனைமலை, இயற்கை ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாகும்.
யானை மலை என்றும் அழைக்கப்படும் இந்த மலைத்தொடரில் புகழ்பெற்ற ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. 600 சதுர மைல்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ள காடு, பலவகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் சில அரிய வகைகளும் இங்கு காணப்படுகின்றன. இந்த இடம் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் மற்றும் தேக்கு மரக்காடுகளின் பரவலால் நிறைந்துள்ளது.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்று, புனுக்குப் பூனைகள்(சீவெட் பூனை) , புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், புள்ளிமான்கள் மற்றும் பல ஆச்சரியங்களைக் கண்டு மகிழுங்கள். கருந்தலை மாங்குயில்,துடுப்பு வால் கரிச்சான் (ராக்கெட் டெயில்ட் ட்ராங்கோ ) போன்றவற்றையும் இங்கு காணலாம். இந்த சரணாலயம், காட்டு பயணத்தையும் மற்றும் மலையேற்றத்தையும் வழங்குகிறது. ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் பரம்பிக்குளம் உள்ளது.
யானைகளை பார்க்க விருப்பமிருந்தால், வரகாளியாறு யானை முகாமுக்குச் செல்லுங்கள், அங்கே 21 யானைகளை பார்க்கலாம். இங்குள்ள ஒரு பிரபலமான தளம் சரணாலயத்திற்குள் அமைந்துள்ள டாப் சிலிப் ஆகும். மலை உச்சியில் இருந்து தேக்கு மரக் கட்டைகளை கீழே உருட்டும் தொடர்ச்சியான செயலில் இருந்து இந்த பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த இடம், மிகச்சிறந்த காட்சியை வழங்குகிறது மற்றும் பறவைகளை பார்ப்பதற்கும் ஏற்ற இடமாகவும் உள்ளது.