சென்னை: தவெக கொடியை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் வரும் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தாக்க செய்த பதில் மனுவில், “பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.