சென்னை: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்கி அதன் லாபத்தில் பங்குதாரர் விவசாயிகளுக்கு உரிய பங்கை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மற்றும் அரசு கட்டுப்பாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகள் இலட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையவை. ஆனால் போதிய முதலீடு இல்லாமை, பழைய இயந்திரங்கள், காலிப்பணியிடங்கள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் காரணமாக அவை முழுத் திறனுடன் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரும்புகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும், நிலுவைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்கவும், நவீனமயமாக்கவும் தனித்துவமான மறுசீரமைப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.