May 2, 2024

‘ராகுல் விவகாரத்தில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி’ – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீதித்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி மேல்முறையீடு: மோடி சமூகத்தை அவதூறு செய்த வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அந்த தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் மேல்முறையீடு செய்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோருடன் அவர் மேல்முறையீடு செய்வார்.

மத்திய அமைச்சர்கள் கண்டனம்: இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதித்துறை மீது காங்கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நீதித்துறையை அச்சுறுத்தும் வகையில் நாடகம் ஆடுகின்றனர், இது கண்டிக்கத்தக்கது என்றார். நாட்டை விட குடும்பமே சிறந்தது என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் சிறைக்கு சென்றபோது, அவருடன் எத்தனை காங்கிரஸ் கட்சியினர் சென்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம்: பாஜகவின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் கூறுகையில், “நான் எனது தலைவருடன் (ராகுல் காந்தி) செல்கிறேன். இது நீதித்துறைக்கு எப்படி அழுத்தம் கொடுக்கிறது? மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் (ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரங்கள் மூலம்) பாஜக குழப்பத்தை உருவாக்குகிறது. இதற்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை,” என்றார்.

“நீதித்துறைக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ராகுல் காந்தி நாட்டின் தலைசிறந்த தலைவர். ராகுல் காந்தியுடன் நாங்கள் போவது அரசியல் நாடகம் அல்ல. அவருடன் நாங்கள் இருக்கிறோம்” என ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!