காசா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு காசாவில் கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
2023-ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதல்களில் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
2023 நவம்பர் 22-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உயிரிழந்த நிலையில், அப்போது 40 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சிய உடல்கள் இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த நிலையில், கடந்த வாரம் மீட்புப் பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 40 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சுமார் 150 பேரின் உடல்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது என ஹமாஸ் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 112 பேரின் உடல்களும் பாலஸ்தீன தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, பிரார்த்தனைக்குப் பிறகு காசாவில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
