பிரிட்டன்: பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை இந்த கோடைகாலத்தில் 5வது முறையாகக் கடுமையான வெப்ப அலை (Heat Wave) தாக்கவுள்ளது.
மே மாதம் முதல் தொடர்ந்து நிலவி வரும் இந்த அசாதாரண வெப்பம் காரணமாக ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ, வறட்சி மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
பிரான்சின் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், பிரிட்டனில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்து ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளன.
காலநிலைத் தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ தாக்கத்தால் 2026 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பிய காலநிலை முகமையான காப்பர்நிகஸ் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் கடற்பரப்பின் சராசரி வெப்பநிலை 20.96 டிகிரி செல்சியஸை எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், மேற்கு ஐரோப்பாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் சராசரி வெப்பநிலை 21.62 டிகிரி செல்சியஸாக பதிவாகி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக நாட்டின் பாதிப்பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதும் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மே மற்றும் ஜூன் மாதங்களில் வீசிய இரு வெப்ப அலைகளால் 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது வரவுள்ள 5வது வெப்ப அலையால் முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பெரிய அளவிலான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் மண் தன் இயற்கையான குளிர்விக்கும் திறனை இழந்து வருவதால், ஐரோப்பாவில் வெப்பத்தின் தாக்கம் மென்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
