சென்னை: ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக 150 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்களின் பயணத்துக்கும், அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நேற்று மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 14-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளன.
மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், போதைப் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் வனச்சோதனைச் சாவடியில் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே பஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன.
