டோக்கியோ: ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை ஆன்லைன் சந்தை மூலம் விற்பனை செய்வதற்கு பிரபல மெர்காரி நிறுவனம் திடீரென தடை விதித்துள்ளது.
ஜப்பானின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சந்தைகளில் ஒன்றான மெர்காரியில் தனிநபர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய நீச்சல் உடைகளை இனிமேல் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது என நிறுவனம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிவித்துள்ளது.
ஜப்பானிய பள்ளிகளில் நீச்சல் பயிற்சி
ஜப்பானில் பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி உடற்கல்வியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் பள்ளி நீச்சல் உடைகள் ஜப்பானிய மொழியில் ‘ஸ்கூல் மிசுகி’ என அழைக்கப்படுகின்றன.
பொதுவாக கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் எளிமையாக வடிவமைக்கப்படும் இந்த உடைகள் பயன்பாட்டை மையமாகக் கொண்டவை. மாணவர்களின் பெயரை எழுதுவதற்கான இடமும் சில பள்ளிகளின் சின்னங்களும் அதில் இடம்பெறும்.
ஏன் தடை?
பள்ளி நீச்சல் உடைகள் ஆண்டில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், பல உடைகள் நல்ல நிலையிலேயே இருக்கும். குழந்தைகள் வளர்ந்து விட்டதால் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், சில குடும்பங்கள் பயன்படுத்திய ஆடைகளை ஆன்லைன் சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட சில நபர்கள் இந்த உடைகளை அவற்றின் பயன்பாட்டைத் தாண்டிய தவறான நோக்கத்துடன் வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு சிலர் காட்டும் ஆர்வம், அந்த உடைகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை என்பதுடனும் தொடர்புடையதாக இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற பரிவர்த்தனைகளை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள மெர்காரி, விதிமுறைகளை மீறி பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் விற்பனையாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
