புதுடில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தாமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக 2023ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கித் திவாரியை கைது செய்தனர். இதையடுத்து அவரது அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த வழக்கில் தங்களது அதிகாரியை துறை ரீதியாக விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகியது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, குற்றச்சாட்டு உண்மையானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானால் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
