வாஷிங்டன்: ரகசிய தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தின் 50 உயர் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போரின் காரணமாக அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் பணியாற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களில் யார் பத்திரிகையாளர்களுக்கு ரகசியத் தகவல்களை கசியவிட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தகவல் கசிவுக்கு காரணமான நபர்களை கண்டறியும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 50 உயர் ராணுவ அதிகாரிகளிடம் பாலிகிராப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பென்டகனின் இந்த நடவடிக்கை அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்த ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ் செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் எரிக் ஸ்லாவின் உள்ளிட்ட மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் கசிவதை பென்டகன் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
