ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் 1,336 உக்ரைன் ட்ரோன்கள் தங்கள் வான்வெளிக்குள் நுழைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய 2022-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் 16 பிராந்தியங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாஸ்கோ பிராந்தியத்தை நோக்கி மட்டும் சுமார் 600 ட்ரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 191 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். இதனால் ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதலின் போது கிரிமியாவையும் ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தையும் இணைக்கும் முக்கியப் பாலமும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் நான்கு தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறை பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், இடிபாடுகள் விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் எரிபொருள் உற்பத்தியும் விநியோகமும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் பாதுகாப்பு கட்டமைப்புக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
