டெஹ்ரானில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையின்படி, ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதல், சர்வதேச சட்ட விதிமுறைகளை முற்றிலும் மீறியதாக அந்த நாட்டு அணுசக்தி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ அணு மையங்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பின்னர், இந்த அறிக்கை இன்று அதிகாலை வெளியிடப்பட்டது.

அமெரிக்கா இவ்வாறு தாக்குதல் நடத்துவது, ஒரு நாடு தன் சட்டபூர்வ உரிமைகளை பின்பற்றி செயல்படும் நிலையில், அந்த உரிமையை அங்கீகரிக்காத வகையில் உள்ளது என ஈரான் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது. இந்த தாக்குதல் சர்வதேச ஒப்பந்தங்களையும், அணுசக்தி துறைக்கான ஐக்கிய நாடுகளின் விதிகளையும் முற்றிலும் மீறுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அணுசக்தி வளர்ச்சி தியாகிகளின் ரத்தத்தில் கட்டமைக்கப்பட்ட துறை என்பதால், அதை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என்றும், இதைத் தடுக்க அனைத்து வழிகளும் ஈரான் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் முயற்சியில் தன்னிச்சையாக செயல்படாமல், சட்டப் பாதுகாப்பின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் பார்டோ அணு மையம், பல ஆண்டுகளாக தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த இடமாகும். ஆனால், அமெரிக்காவின் பி-2 போர் விமானங்கள் மூலம் வீசப்பட்ட ஜி.பி.யூ-57 பங்கர் பஸ்டர் குண்டுகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஈரான் பாதுகாப்புத் தரப்புகள் சில முக்கியமான அணுசக்தி உள்கட்டமைப்புகளை முன்கூட்டியே பாதுகாப்பாக அகற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு பெரிய சேதத்திலிருந்து நாட்டை காப்பாற்றியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான், இந்த தாக்குதலுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள், அயன்ஸ் உள்ளிட்ட அமைப்புகளிடமும், அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம், உலக அரசியல் மையங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலை மேலும் தீவிரமாவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.