அமெரிக்காவின் 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிச் சலுகை மற்றும் கடன் உச்சவரம்பு உயர்வு மசோதாவில் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் இந்த மசோதாவை அறிவித்திருந்தார். இதில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வரி 5 சதவீதத்தில் இருந்து 1 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்லாமல், செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்பு, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதி குறைப்பு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

அத்துடன், ராணுவம் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்காணிக்கும் ICE அமைப்புகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்காவின் பொருளாதார அடித்தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக டிரம்ப் வலியுறுத்தினார். மக்களுக்குப் பயனளிக்கும் வரிக்கட்டமைப்பு எனும் அடிப்படையில் சட்டமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா ‘அழகிய பெரிய மசோதா’ என டிரம்ப் பெருமையாக அழைத்த நிலையில், அவருடைய குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த எலான் மஸ்க் போன்ற முக்கிய நபர்களும் அதனை எதிர்த்தனர். இருந்தாலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் ஜூலை 4ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி, மசோதாவுக்கு உற்சாகமாக கையெழுத்திட்டார்.
இந்தச் சட்டம் அமெரிக்க வரலாற்றில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. டிரம்பின் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் படியாகவும், அவருக்கு ஒரு அரசியல் வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த மசோதாவால் அமெரிக்கா நிதியாக வலுவடையும் என்றும், மக்களுக்கு நேரடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.