பெஹர்ஷெபா, ஜூன் 21 – ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து கடுமையான பதற்றம் நிலவும் நிலையில், அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தவுள்ளதா என்ற கேள்விக்கு பதில் தெரிய வரும் இரு வாரங்களில் கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான், 60% வரை யுரேனியம் செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. 90% செறிவூட்டல் அடைந்தால் நிச்சயமாக அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்பதால்தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் மிகுந்த கவலையில் உள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. இதில், ஈரானின் அணு உலைகள், ஏவுகணை மையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் நசுக்கின. பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் பதில் தாக்குதலிலும் ஈரானின் அராக் அணு உலை தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்நிலையில் டிரம்ப், “ஈரானின் பார்தோ மலைக்குள் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தை தாக்குவதற்காக ‘பங்கர் பஸ்டர்’ வகை ஏவுகணை பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறன. இரண்டு வாரங்களில் முடிவெடுப்பேன்” என்றார்.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்கா பேச விரும்பினால் இல்லை என்பதே எங்கள் பதில். இஸ்ரேலின் தாக்குதல்களே பேசாமல் இருக்க காரணம்” என்றார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “அமெரிக்கா தாக்குதலை முடிவு செய்தாலும் இல்லையெனினும், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. வேறு நாடுகளின் அனுமதிக்காக காத்திருக்க மாட்டோம்” என்றார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தில், ஈரான் ‘அணு ஆற்றல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே’ என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக பேச்சு நடத்தும் வாய்ப்பு உள்ளதாக பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.