சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்தார். விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்துக்கு, தமிழக பா.ஜ.க. தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்றார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. காலை விருந்துடன் அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமா் மோடி தமிழகத்துக்கு இன்று வருகை தரவிருக்கும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் அ.ம.மு.க. இணைப்பு நடந்தது, நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், நேற்று தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த விருந்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானசி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக பேரவைத் தோ்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தும் பணியை அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
சென்னையில் நேற்று தமிழக பா.ஜ.க. தோ்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அன்புமணியின் பா.ம.க., அ.ம.மு.க. இணைந்துள்ள நிலையில், நேற்று அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.