தஞ்சாவூர்: சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகிறது. உடன் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே திருவையாறு பைபாஸ் சாலை வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் ஆற்று பாலம் பகுதியில் விவசாயிகள் சாலைமறியல் செய்தனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். காவிரி டெல்டா மாவட்டத்தில் முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடந்து வருகிறது.
சில பகுதிகளில் கோடை சாகுபடியாகவும் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடைப்பகுதி வரை தண்ணீர் சென்றதால் குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சி மேற்கொள்ளப்பட்டு வரலாற்று சாதனை படைத்தது. தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் 100 நாட்கள் ஆன நிலையில் தற்போது கல்லணை கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காய்ந்து வருகிறது.
போதிய அளவு தண்ணீர் இல்லாதது, கடும் பனிப்பொழிவு ஆகியவற்றால் சாகுபடி பயிர்கள் கருகி வருவதால் மகசூல் குறைந்து பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே தொடர்ந்து கல்லணை கால்வாயில் தடை இல்லாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலையில் வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் பாலம் அருகில் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் சம்பா நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரை செலவு செய்துள்ளோம். எனவே போதிய அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த வல்லம் டிஎஸ்பி காயத்ரி, நீர் வளத்துறை உதவிய செயற்பொறியாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போதிய அளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாலைமறியலை விலக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.