சென்னை: தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். இதனை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கேரட் – 2
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 5 பற்கள்
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கடலைப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை: தக்காளி, வெங்காயம், இஞ்சி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி ரெடி.