தஞ்சாவூர்: கட்சி தன்னை நீக்கியிருந்தாலும் மக்களை நம்பி சுயேட்சையாக களம் ஆதரவாளர்களுடன் மாஸ் காட்டி வருகிறார். இவர் எவ்வித குறைகளையும் கூறாமல் மக்களே எனக்கு உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பை கொடுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலையில், கடந்த 30ம் தேதி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளிதரன் தன்னிச்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே, தஞ்சாவூரில் வேட்புமனுத்தாக்கல் செய்த பாஜக நிர்வாகி முரளிதரனை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் தொகுதி பாஜகவிடம் இருந்து பறி போய் விடக்கூடாது என்பதற்காகதான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆனால் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். இருப்பினும் மக்களை நம்பி, சுயேட்சையாக வைரம் சின்னத்தில் களம் இறங்கி உள்ளேன் என்று தனது தீவிரமான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்கள் 100க்கும் அதிகமானோர் இருசக்கரவாகனத்தில் முன்செல்ல திறந்தவெளி ஜீப்பில் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். யார் பற்றியும் குறைகள் தெரிவிக்காமல் தஞ்சை தொகுதியில் வளர்ச்சிக்கு நிச்சயம் பாடுபடுவேன் என்று உறுதி தெரிவித்து அமைதியாக மாஸ் காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது இந்த அமைதியான பிரச்சாரம் மக்களை கவர்ந்து வருகிறது.