சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே. புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் நடிகர் தேர்வு (காஸ்டிங் கால்) என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
தங்களது நிறுவனத்தின் கீழ் தயாராகும் புதிய படங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறி, சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்புகளைப் பரப்பி இளைஞர்களை ஏமாற்றி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி குறித்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எங்கள் நிறுவனத் திரைப்படங்களுக்காக நடிகர் தேர்வு செய்ய எந்தவொரு ஏஜெண்ட்டையோ அல்லது மூன்றாவது நபரையோ நாங்கள் நியமிக்கவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமான நடிகர் தேர்வு அறிவிப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் சரிபார்க்கப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, போலியான வாட்ஸ்அப் செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.