சென்னை: “கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது.
மங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.