தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 140க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த கடைகளில் 3000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு காலி பாட்டிலை திரும்ப வழங்கும்போது அந்த பத்து ரூபாய் திருப்பி வழங்கப்பட்டு வந்தது
இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக மது பிரியர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு மது கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக வசூல் செய்த பத்து ரூபாயை வசூலிக்க கூடாது என தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து தான் கடைக்கான கூடுதல் வாடகை, மின் கட்டணம், காலி மது பாட்டில்களில் திரும்ப பெறுவதற்கான கூடுதல் பணியாளர்கள் என கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதை அந்த தொகையில் மூலம் சமாளித்து வந்ததாகவும் இவ்வாறு கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் செயலை பலரும் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் டாஸ்மாக் நிறுவனம் அந்த ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து வருகிறது .
எனவே டாஸ்மாக் நிர்வாகம் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கடைக்கான வாடகை ,மின் கட்டணம், பணியாளர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை அரசு உயர்த்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தி கடந்த சில நாட்களாகவே மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 140க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.