கொச்சி: புதிய சாதனை படைக்கும் திரிஷ்யம் 3… ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்து வருகிறது.
2013-ம் ஆண்டு வெளியான முதல் ‘திரிஷ்யம்’ திரைப்படம் வெறும் ரூ.5 கோடி செலவில் தயாராகி ரூ.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டதுடன், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது வெளியாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே ரூ.50.35 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 7 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாக ‘திரிஷ்யம் 3’ மாறும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.