சென்னை: அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அறிவித்திருக்கும் நிலையில், அவரது விலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பின்னாளில் அது அரசியல் கட்சியாக உருவெடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள், “அண்ணாமலை விலகியது பாஜகவுக்கு இழப்பா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “பாஜக இன்று நேற்று உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இது ஒரு சித்தாந்த அடிப்படையிலான இயக்கம். எனவே அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.
மேலும், “யார் வேண்டுமானாலும் ஒரு இயக்கம் அல்லது கட்சியை ஆரம்பிக்கலாம். பிரதமர் மோடி உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தமிழ் மொழி, தமிழ் மக்கள் குறித்து பெருமையுடன் பேசுகிறார். அண்மையில் தமிழகத்தின் வரலாற்றுச் செப்பேடுகளையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார்” என்று கூறினார்.
தமிழகத்திற்கு தேவையான நிதி, சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், ரேஷன் பொருட்களையும் மத்திய அரசே வழங்குவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.