நியூயார்க்: போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என ஐ.நா. சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் நடாஞ்ச், எஸ்பஹான் மற்றும் போர்டோ அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஐ.நா. சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியது. சில இடங்களில் ஆய்வுகள் தொடர்ந்தாலும், சேதமடைந்த முக்கிய அணுசக்தி நிலையங்களுக்கு ஆய்வாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானிடம் தற்போது எவ்வளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது, அது எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலையும் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த இயலவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. கணக்குப்படி, ஈரானிடம் 440.9 கிலோ அளவிலான 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக கூறப்படுகிறது. இது அணு ஆயுத உற்பத்திக்கு போதுமானதாக கருதப்படுகிறது.