மும்பை: தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் விராட் கோலியும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியபோது விராட் கோலிக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு (Hamstring) காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே ஆகியுள்ளதால், அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. விராட் கோலிக்கு பதிலாக இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டி ஜூன் 17-ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜூன் 20-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது.