புதுடில்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.38.76 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரப் பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் மற்றும் குடும்பத்தினரிடம் மொத்தம் ரூ.38.76 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில் ரூ.11.37 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அதில் ரூ.6.60 கோடி மதிப்பிலான சொத்துகள் தனது பெயரிலும், ரூ.4.41 கோடி மதிப்பிலான சொத்துகள் மனைவியின் பெயரிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரூ.8.31 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் தனது பெயரில் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.9.86 கோடி மதிப்பிலான சொத்துகளும், Hindu Undivided Family பெயரில் ரூ.9.22 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னிடமும் மனைவியிடமும் சேர்த்து ரூ.2.04 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.