சீர்காழி: சீர்காழியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் நிலவி வருகின்றன.
சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், திருமுல்லைவாசல், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிந்தராஜன் நகர் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இரவு 8.30 மணி வரை மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரத் துறையை கண்டித்து கோஷமிட்ட மக்கள், பின்னர் தீப்பந்தங்களை மின்கம்பங்களில் கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில், “தினமும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மின்சாரம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் நேரம் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.
மேலும், அருகில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.