பெங்களூரு: பெங்களூருவில் இருந்து மும்பை புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் மீது பறவை மோதியதால், விமானம் மீண்டும் ஓடுதளத்திற்குத் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மகாராஷ்டிரா மாலம் மும்பைக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பறவை விமானத்தின் மீது மோதியது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மீண்டும் ஓடுதளத்திற்கே திரும்பிச் சென்றது. பின்னர் விமானத்தின் எஞ்சினில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
விரிவான பரிசோதனைக்குப் பிறகு விமானம் மீண்டும் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டது.
இந்த எதிர்பாராத தாமதத்தால் பயணிகள் சிலர் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.