சென்னை: லட்சிய ஜனநாயகக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மற்றும் கட்சியிலிருந்தும் முழுமையாக விலகுவதாக நடிகர் தாடி பாலாஜி அறிவித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய பிறகு ஜோஸ் சார்லஸ் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சியில் இணைந்திருந்தார்.
லாட்டரி அதிபர் மார்டினின் மகனான ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் சமூக அமைப்புகளை நடத்தி வந்த நிலையில், பின்னர் லட்சிய ஜனநாயகக் கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் பரப்புரை பொதுச் செயலாளராக தாடி பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மற்றும் கட்சியிலிருந்தும் முழுமையாக விலகுவதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், முக்கிய பிரபலமான தாடி பாலாஜி விலகியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்த அவர், கட்சியில் எதிர்பார்த்த பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாகவும், பின்னர் கட்சியை விமர்சிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.