சென்னை: கேள்வி கேட்கும் உரிமையை யாரும் பறிக்க முடியாது என்றும், தலைவர்களை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களிலும் தனது கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் பொதுச் செயலருமான நாகபாபு கொனிடேலா, ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கு ஆதரவாக “தலைவரின் வார்த்தையே இறுதியானது; கேள்வியின்றி தலைவரைப் பின்பற்றுங்கள்” என்ற கருத்தை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், “நாங்கள் ஆடுகள் அல்ல. பிழைப்பதற்காக அடிமைகளாக வாழ்பவர்கள் அல்ல. கேள்வி கேட்பது எங்கள் உரிமை. எந்த தலைவராக இருந்தாலும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.