திருப்பூர்: புதிய அரசின் செயல்பாடுகள் விரைவில் மக்களுக்கு கண்கூடாக தெரியும் என்றும், மாற்றத்தை காண சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “லஞ்சம், ஊழலற்ற ஆட்சி, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகமே முதல்வர் விஜயின் முக்கிய இலட்சியம். ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்களிலேயே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதியவர்களாகிய எங்களுக்கு மக்கள் கொஞ்சம் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றனர்.
மேலும், “முந்தைய ஆட்சிகளை விட அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். முதல்வர் விஜய் தினமும் காலை நேரத்தில் தலைமைச் செயலகத்திற்கு வந்து மாலை வரை தொடர்ந்து பணியாற்றுகிறார். கடந்த ஆட்சியில் தேங்கியிருந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக சரிசெய்யப்படும்” என்றும் தெரிவித்தனர்.
திருப்பூர் சாய ஆலைகளில் தேங்கியுள்ள கலவை உப்பு கழிவுகளை அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்கள் கூறினர்.