தெலுங்கானா: அமெரிக்காவில் பணியாற்றி வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அன்ஷுல் குஞ்சா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான அன்ஷுல் குஞ்சா, கடந்த 2023-ஆம் ஆண்டு எம்பிஏ படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.
படிப்பை முடித்த பிறகு Philadelphia நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், கூடுதல் வருமானத்திற்காக வார இறுதி நாட்களில் பிட்சா டெலிவரி பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு அவருக்கு வந்த போலி ஆர்டரை ஏற்று குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்ஷுலிடம் இருந்து பணம், செல்போன் அல்லது நகை எதுவும் கொள்ளையடிக்கப்படாததால், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.