சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், ஆம்னி பேருந்துகள், பார்சல் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்த சோதனையில் தமிழக காவல்துறையின் புதிய போதைப்பொருள் கண்டறியும் மோப்பநாய் ‘மேக்ஸ்’ முதன்முறையாக பங்கேற்றது. பேருந்துகளின் பதுக்கல் அறைகள் மற்றும் பார்சல் மூட்டைகள் அனைத்தும் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற சோதனைகளில் 45 கிலோ கஞ்சாவை ஆட்டோவில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதிகள் மற்றும் சந்தேகப்படும் இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.