தெலுங்கானா: அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 15-க்கு மாற்றப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
2026-27 கல்வியாண்டிற்காக ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, மாநில பள்ளிக்கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜூன் 15-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதால் கல்வி நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஜூலை 11-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வி இயக்குநர் நவீன் நிக்கோலஸ் வெளியிட்டுள்ளார்.