ஆவடி: ஆவடியில் மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து பியூஸ் கேரியர்களை திருடி மின்தடையை ஏற்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பல மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து மொத்தம் 27 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆவடி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (19), வினித்ராஜ் (20) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் பியூஸ் கேரியர்களில் இருந்த காப்பர் வயர்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பல திருட்டு வழக்குகளிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.