சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ஜூன் மாத தொகை வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 உதவித்தொகை எப்போது அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
வழக்கம்போல் ஜூன் மாதத்திற்கான தொகையும் நேற்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தற்போதுள்ள நலத்திட்டங்கள் தொடரும் என்றும், புதிய உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால் தற்போது வழங்கப்படும் ரூ.1,000 உரிமைத்தொகை நிறுத்தப்படுமோ என்ற அச்சம் பெண்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் கடந்த மாதம் மற்றும் இந்த மாதமும் வழக்கம்போல தொகை வரவு வைக்கப்பட்டதால் அந்த அச்சம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், ரூ.2,500 உதவித்தொகை எப்போது வழங்கப்படும், தற்போதைய பயனாளிகளுக்கே தொகை உயர்த்தப்படுமா அல்லது புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்விகள் பெண்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகின்றன.