புதுடில்லி: மத்திய அரசு மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் அல்லது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில அரசாக இருந்தாலும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, கல்வி அமைப்பில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 25 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கம் முன்பு நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் இன்ஸ்டாகிராம் வழியாக கலந்துரையாடியபோது ஜார்க்கண்ட் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், நாட்டின் கல்வி அமைப்புக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும், ராஜஸ்தானின் கோடா, உத்தரகாண்டின் டேராடூன் உள்ளிட்ட இடங்களிலும் இதே கருத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
நமது கல்வி அமைப்பு தற்போது சீர்குலைந்த நிலையில் இருப்பதோடு, மாணவர்களுக்கு சுமையாகவும் அடக்குமுறையாகவும் மாறிவிட்டதாக அவர் விமர்சித்தார்.
மத்திய அரசு மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் அல்லது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில அரசாக இருந்தாலும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, கல்வி அமைப்பில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
