வேலூர்: விருதுநகரில் ரூ.1,900 கோடி முதலீட்டில் ஜவுளிப் பூங்கா உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவில் வளாகத்தில் நடைபெற்ற ‘வித்யா நேத்ரம்’ கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர், தமிழகத்தின் தொழில், உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.
தமிழக மக்களின் தொழில்திறனை பாராட்டிய கிஷண் ரெட்டி, உணவுப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் மற்றும் குறைக்கடத்தி சில்லுகள் வரை பல்வேறு துறைகளில் தமிழகத்தின் பங்களிப்பு இருப்பதாக குறிப்பிட்டார். மணலூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் மத்திய அரசின் ஆதரவுடன் 70 மின்னணு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ.1,900 கோடி ஜவுளிப் பூங்கா
விருதுநகரில் ரூ.1,900 கோடி முதலீட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஜவுளித்துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய வரி பகிர்வு மூலம் ரூ.4.6 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது இது அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரயில், சாலை, விமான நிலையம்
தமிழகத்தில் சுமார் 2,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 9 வந்தே பாரத் மற்றும் 9 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டு, பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்வித்துறையிலும் பல்வேறு விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 700-ல் இருந்து 1,300-ஆக உயர்ந்துள்ளதாகவும், புதிய ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் வரலாற்றையும் குறிப்பிட்டார்
ஆழ்வார்கள், நாயன்மார்கள், உத்திரமேரூர் கல்வெட்டுகள் உள்ளிட்ட தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் கிஷண் ரெட்டி தனது உரையில் குறிப்பிட்டார். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1981-ல் மீண்டும் வழிபாடு தொடங்கிய வரலாற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் கல்வியை முக்கிய பொறுப்பாக கருதி, தாங்கள் பெறும் அறிவை சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
