மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனிசூர் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அபு சுபியான் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதான அனிசூர் ரஹ்மான் மற்றும் அவரது 24 வயது மகன் அபு சுபியான், காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நகாடி ரெயில்வே கேட் அருகே ஒரு கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த கும்பல், பின்னர் இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஹரநகர் கிராம பஞ்சாயத்து தலைவர் பாத்திமா பீவி, சாஜேப் ஷேக் மற்றும் மித்து ஷேக் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணியில் சிறையில் உள்ள பாத்திமா பீவியின் கணவர் ஜப்பார் ஷேக் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
