புதுடெல்லி: நாட்டில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் முறையாக உற்பத்தி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மொத்தம் 21 சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு தினசரி அதிகபட்ச உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தினமும் மொத்தம் 63,810 டன் எல்பிஜி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்தது. எதிர்காலத்தில் விநியோகத் தடை ஏற்பட்டாலும் வீட்டு உபயோக எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் தினமும் 18,000 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் 18 சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தினமும் 31,470 டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி அட்டவணை 6 மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
