டாக்கா: வங்கதேசத்தின் 23-வது அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அதன்பின்னர் முகமது ஷஹாபுதீன் அதிபர் பதவியில் தொடர்ந்து இருந்து வந்தார். அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 20-ம் தேதி வங்கதேச நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 343 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆளும் தரப்பு வேட்பாளராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரும், 11 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அகமதுவும் போட்டியிட்டனர். இதில் ஆலம்கீர் 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 35 ஆண்டுகளில் வங்கதேச அதிபர் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 வயதான ஆலம்கீர், வங்கதேச தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். 1990-ம் ஆண்டு அக்கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பொருளியல் பட்டம் பெற்றுள்ள அவர், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு அரசியல் மற்றும் அரசு பொறுப்புகளை வகித்துள்ள அவர், நாளை அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
