ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1998-ம் ஆண்டு 23 காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்ட வன்தாமா கிராம வழக்கை மாநில புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.
காஷ்மீரில் 1990-களில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் தொடர்புடைய பல கொலை வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நடவடிக்கையை மாநில புலனாய்வு அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானதாக வன்தாமா படுகொலை வழக்கு பார்க்கப்படுகிறது.
கந்தர்பால் மாவட்டம் வன்தாமா கிராமத்தில் 1998-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி, குடியரசு தினத்துக்கு முந்தைய இரவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 9 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ள விசாரணை அதிகாரிகள், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 1989-ம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி நீல்காந்த் கன்ஜூ கொலை வழக்கு மற்றும் காஷ்மீர் பண்டிட் தலைவர் திகா லால் தப்லூ கொலை வழக்கும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
