தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில் நியாய விலை கடைகளில் நடைபெற்று வரும் e-KYC முகாம்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகப் பணிகளை மாவட்ட கலெக்டர் ரேவதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளில் உள்ள 19AB016PN காவேரி சூப்பர் மார்க்கெட், 19AB017PN எல்லையம்மன் கோவில் தெரு-1, 19AB018PN எல்லையம்மன் கோவில் தெரு-2, 19AB019PN கிழவீதி-1, 19AB014PN சீனிவாசபுரம்-1, 19AB015PN சீனிவாசபுரம்-2, 19AB056PN சீனிவாசபுரம்-3, 19AB070PN சீனிவாசபுரம்-4, 19AB011PN தமதமமேடை-1 மற்றும் 19AB012PN மேலவீதி-2 ஆகிய நியாய விலை கடைகளில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் e-KYC மூலம் முறையாகப் பதிவு செய்யப்படுகிறதா என்பதை அவர் கேட்டறிந்தார். முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறதா, e-KYC பதிவு மேற்கொள்ள போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முறையாகவும், உரிய அளவிலும் வழங்கப்படுகிறதா என்பதையும் கலெக்டர் ரேவதி பார்வையிட்டார். கடைகளில் உள்ள உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் விநியோக நிலவரம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் e-KYC பதிவை மேற்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி e-KYC பதிவு செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உரிய அளவிலும், தரமான முறையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் ரேவதி உத்தரவிட்டார்.
இதனிடையே, TCCWS வளாகக் கட்டிடத்தை புனரமைப்பதற்கான உரிய முன்மொழிவைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) உதயகுமார், வட்டாட்சியர் மூர்த்தி, தனித்துணை வட்டாட்சியர் (கு.பொ.வ.) ஹெலன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
