சென்னை: தமிழகத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், புனித ஜார்ஜ் கோட்டை சுமார் 400 ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக மையமாக விளங்கி வருவதாக தெரிவித்தார்.
107 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டை வளாகத்தில் தலைமைச் செயலக பயன்பாட்டுக்கு சுமார் 4 ஏக்கர் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ள நிலப்பரப்பு பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த முதல்வர், அனைத்து அரசு துறைகளையும் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்றார்.
புதிய வளாகத்தில் நவீன அலுவலகங்கள், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். அதே நேரத்தில் புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
